“வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று”
மழை உலகின் எல்லா உயிர்க்கும் சாகா மருந்து என்றார் வள்ளுவர். அந்த சாகா மருந்தினை எந்த அளவுக்கு நாம் சாக்கடை வழியோடி வீணாகாது காத்து உபயோகிக்கிறோம்?
நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிரப்பி பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க்குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும். இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.
வீட்டில் கிணறு உள்ளவர்கள் இந்தக் குழியின் அடியில் இருந்து ஒரு குழாய் மூலம் நீரைக் கிணற்றுக்குள்ளும் விட்டுக் கொள்ளலாம்.ஆனால் நடை முறையில் செய்யப்படுவதெல்லாம் ஒரு கண் துடைப்புதான். இப்படிச் செய்யாமல் நேரடியாகவே மழை நீரைத் தொட்டிகளில் சேமித்து வைக்கலாம். எல்லா உபயோகத்திற்காகவும் சேமித்து வைக்க வேண்டும் என்றால் இரு நபர்கள் உள்ள குடும்பத்திற்குக் குறைந்த பட்சம் 1,10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் தேவைப்படும், ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு 150 லிட்டர் நீர் என்ற கணக்கில். இது நடை முறையில் சாத்தியமாகாத ஒன்று நமக்கு. ஆனால் வேறு வழி இல்லை என்னும் போது இதைச் செய்பவர்களும் உண்டு.
குடிநீருக்காக மழை நீரை சேமிப்பதில் இரண்டு தொந்திரவுகள் உண்டு. ஒன்று முதல் மழையில் வரும் நீர் குப்பை கூளத்தோடு இருக்கும். அதன் பின் வரும் மழை நீரில் கொசு முட்டை இருக்கும். பிடித்து வைத்த பத்தே நாட்களில் தொட்டி பூராவும் கொசுப் புழுக்களாக இருக்கும். இதைத் தவிர்க்க மழை நீரை ஒரு பில்டர் தொட்டி வழியே செலுத்திப் பிடிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு பில்டர் தொட்டியின் அமைப்பை இணைத்துள்ள படத்தில் பார்க்கவும். சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஹெச்,டி.பி.இ. டேங்க் போதும். வருடம் பூராவும் யார் கையையும் எதிர்பார்க்க வேண்டாம் குடிநீருக்கு. முதலீடு செய்யும் பணம் மூன்று நான்கு வருடங்களில் திரும்பி விடும் உங்களுக்கு.
(குறிப்பு – வடிகட்டிய நீர் வெளியேறும் குழாய்க்குள்ளே நீர் செல்வதற்கான துளைகள் கீழ்ப்புறம் இருப்பதைக் காணவும். இது தப்பித் தவறி சிறு மணல் துகள்கள் மேலிருந்து வந்தாலும் அது குழாய் வழியே வெளியேறி வால்வுகளை பழுதடையச் செய்திடாமல் இருப்பதற்காகவே.)
பில்டர் தொட்டியினை சுமார் ஏழடி உயரத்தில் அமைத்து விட்டால் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரரை நேரடியாக ஹெச்டிபியி தொட்டிகளில் சேமித்து வைத்திடலாம்.
No comments:
Post a Comment